சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.28 திருக்கடவூர் வீரட்டம்
பண் - நட்டராகம்
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைமேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
1
பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
2
அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே.
3
போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
4
மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
5
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
6
எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7
வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறா செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே.
8
அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
9
காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டததுள்
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com